சோலையார் அணை நீர்மட்டம் 75 அடியை தாண்டியது – மழை தொடர்ந்து பெய்தால் நிரம்பிட வாய்ப்பு

0
92

வால்பாறை பகுதியில் கடந்த ஜூன் முதல் வாரம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மழை கிடைக்காத நிலையே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 10-ந் தேதியிலிருந்து தென்மேற்கு பருவமழை தீவரமடைந்து வருகிறது. இந்த மழை அவ்வப்போது கனமழையாக இரவு, பகலாக விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து ஏற்பட் டுள்ளது.

ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தற்போது குறைவான மழையே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11-ந் தேதி சோலையார்அணை 100 அடியை தாண்டிவிட்டது. ஜூலை 1-ந் தேதி அணை தனது முழு கொள்ளளவான 160 அடியை தாண்டியது. ஜூலை 11-ந் தேதி அணை நிரம்பியதால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி வரை 160 அடியிலேயே இருந்தது. தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந் தேதி வரை 100 அடியில் இருந்து வந்தது. அதன் பின்னர் படிப்படியாக குறைந்து. 10 அடிக்கு வந்து விட்டது. இதனை தொடர்ந்து இப்போது தான் சோலையார் அணையின் நீர்மட்டம் 75.98 அடியை தாண்டி உள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருப்பதாலும் சோலையார்அணைக்கு தண்ணீர் வரத்து உள்ளதால் சோலையார் மின்நிலையம் 1-ல் மின்உற்பத்தி தொடங்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்திக்குப்பின் 295 கனஅடி் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறக்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் மேலும் அதிகளவில் தென்மேற்கு பருவமழை கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிக பட்சமாக சின்னக்கல்லாரில் 26 மி.மீ.மழையும், வால்பாறையில் 20 மி.மீ.மழையும், சோலையார்அணையில் 25 மி.மீ.மழையும், கீழ்நீராரில் 35 மி.மீ.மழையும் பெய்துள்ளது. சோலையார் அணைக்கு வினாடிக்கு 988.43 கன அடித்தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த மழை தொடர்ந்து நீடித்தால், அணை நிரம்புவதற்கும், பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் சமவெளிப்பகுதி மக்களின் விவசாயத் தேவைகள், குடிதண்ணீர் தேவைகளை நிறைவேறுவதற்கும், தொடர்ந்து மின்சார உற்பத்திக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் வால்பாறை பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.