கோவை; சொத்துக்களை தங்கள் பெயரில் எழுதி வைக்க வலியுறுத்தி, தந்தையை தாக்கிய மகன்கள் மற்றும் பேரன் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சரவணம்பட்டி, சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன், 73. இவருக்கு சிவானந்தபுரம் பகுதியில் சொந்தமாக 28 வீடுகள் உள்ளன. வீடுகளை வாடகைக்கு கொடுத்து, வசூல் செய்து வருகிறார்.
இந்நிலையில், நடராஜனின் மகன்களான ராஜா பிரபு மற்றும் செந்தில் பிரபு ஆகிய இருவரும் வீடுகளை, தங்கள் பெயரில் எழுதி வைக்குமாறு கேட்டு, நடராஜனிடம் அடிக்கடி பிரச்னை செய்து வந்தனர். நடராஜன் நடத்தி வரும், ‘சிட் பண்ட்’ நிறுவனத்தை கைவிட வேண்டும் எனவும் கோரினர்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி நடராஜன், சிவானந்தபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற போது, ராஜா பிரபு, அவரின் மகன் பிரகதீஸ்வரன் மற்றும் செந்தில் பிரபு ஆகியோர், அங்கு வந்து நடராஜனிடம் தகராறு செய்தனர். தொடர்ந்து, ராஜா பிரபு இரும்பு கம்பியால் நடராஜனின் தலை, கால், கைகளில் கடுமையாக தாக்கினார். செந்தில் பிரபு, பிரகதீஸ்வரன் ஆகியோரும் தாக்கினர். அக்கம் பக்கத்தினர் நடராஜனை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நடராஜன் அளித்த புகாரின்படி, சரவணம்பட்டி போலீசார் ராஜா பிரபு, செந்தில் பிரபு மற்றும் பிரகதீஸ்வரன் ஆகியோர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.