பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே ஆலாம்பாளையத்தில், சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. மானாவாரி நிலங்களில் சொட்டுநீர் பாசனம் வாயிலாக சோளம், தட்டைப்பயிறு, கொள்ளு ஆகியவை விதைக்கப்படுகின்றன.
ஜமீன்காளியாபுரம், சென்னியூர் பகுதிகளில் மேட்டுப்பாங்கான இடங்களில் சொட்டுநீர் பாசனத்தில் பருத்தி, வாழை, கத்தரி, தக்காளி ஆகியவையும் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஆலம்பாளையத்தில், சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: சொட்டு நீர் பாசனத்தில் மரவள்ளி குச்சிகள், வேகமாக வளர்கின்றன. அதே நேரத்தில் பசுமையாகவும் காணப்படுகின்றன.
புதிய ரக சாகுபடி செய்யப்பட்டாலும், எட்டு மாதத்துக்குப் பின் ஏக்கருக்கு, 12 முதல் 15 டன் வரை மரவள்ளி மகசூல் கிடைக்கும். இங்கு,உற்பத்தி செய்யப்படும் மரவள்ளி கிழங்குகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
ஜவ்வரசி, மாட்டு தீவனம் மற்றும் உணவு பொருட்கள் உற்பத்திக்கு என, பல்வேறு பயன்பாட்டிற்கு மரவள்ளி கிழங்குகள் உபயோகப்படுத்தப்பட்டும் வருகின்றன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.