செவ்விளநீருக்கு கடும் கிராக்கி

0
141

வரத்து குறைந்து தட்டுப்பாடு அதிகரித்ததன் காரணமாக செவ்விளநீருக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச்செல்கின்றனர்.

இளநீர் உற்பத்தி

ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 23 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தேங்காய் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால், இளநீர் அறுவடையில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி தினமும் 5 லட்சம் இளநீர் லாரிகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக வெளிமாநிலங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் இளநீர் விலை குறைந்தது. இதன் காரணமாக ஒரு இளநீரின் விலை கடந்த மாதம் ரூ.16 ஆக இருந்தது.

விலை உயர்வு

இந்த விலை கட்டுப்படியாகாததால் இடுபொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, லாரி வாடகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து விவசாயம் செய்து வரும் விவசாயிகள் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்தனர். இதை ஈடு செய்ய பாக்கு, ஜாதிக்காய், வாழை, கோகா உள்ளிட்ட ஊடுபயிர்களை சாகுபடி செய்து, வருமானம் ஈட்ட தொடங்கினர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் மழை குறைந்து வெயில் அடித்து வருகிறது. இதன் காரணமாக இளநீரின் தேவை அதிகரித்து உள்ளது. குறிப்பாக செவ்விளநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் விலையும் உயர்ந்துள்ளது. எனினும் இளநீரை கொள்முதல் செய்ய வியாபாரிகளிடையே போட்டி நிலவுகிறது.

கிராக்கி
நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு ரக இளநீரின்(ஒன்று) விலை ரூ.3 உயர்த்தப்பட்டு, ரூ.19 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு டன் இளநீரின் விலை ரூ.6,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறும்போது, காலநிலை மாற்றம் காரணமாக இந்த மாதம் இளநீர் உற்பத்தி குறைந்துள்ளது. குறிப்பாக செவ்விளநீர் வரத்து மிகவும் சரிந்ததால் கிராக்கி அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச்செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே விவசாயிகள் இளநீருக்கு கூடுதல் விலையை வியாபாரிகளிடம் கேட்டு பெற வேண்டும் என்றார்.