கோவை செல்வபுரத்தில் செல்வசிந்தாமணி குளம் உள்ளது. இந்த குளக்கரையை அழகுப்படுத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இந்தநிலையில் குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கின. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீச தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மணிமாறன் கூறும்போது, செல்வபுரம் பகுதியில் செயல்பட்ட சாயப்பட்டறைகள் ஏற்கனவே அகற்றப்பட்டுவிட்டன. எனவே சாயக்கழிவு நீர் கலக்க வாய்ப்பு இல்லை. சாக்கடை கழிவு நீர் கலந்து இருக்கலாம். அல்லது வெயிலின் தாக்கத்தினால் தண்ணீர் குறைந்து வெப்பத்தினால் மீன்கள் செத்து மிதக்க வாய்ப்பு உள்ளது. குளத்து நீரை ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சந்தோஷ்குமார் கூறும்போது, குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், உயிருடன் உள்ள மற்ற மீன்களை காப்பாற்றவும் உரிய கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.