செம்மொழி பூங்கா பணியில் தரமில்லை: ஆய்வு செய்ய குழு அமைக்க கோரிக்கை

0
24

கோவை; கோவையில், 45 ஏக்கரில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளின் தரத்தை, தலைமை செயலர் மூலமாக குழு அமைத்து ஆய்வு செய்ய, அ.தி.மு.க., வலியுறுத்தியுள்ளது.

கோவை, காந்திபுரத்தில், ரூ.165.25 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. வரும் ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு இருக்கிறது. 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட இருப்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், கான்கிரீட் கட்டடங்கள் கட்டும் பணியே நடந்து வருகிறது.

இதுதொடர்பாக, மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், ‘செம்மொழி பூங்கா பணிகள் அவசர கதியில் தரமின்றி நடைபெறுவது போல் தெரிகிறது. பணிகள் தரமாக இருக்கிறதா என தலைமை செயலர் மூலம் குழு அமைத்து ஆய்வு செய்து, தரமாக அமைக்க வேண்டுமென கோவை மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இன்னும் பணி முழுமையாக முடிவதற்கு முன்பே, நுழைவு கட்டணம் மற்றும் பலவிதமான கட்டணங்கள் நிர்ணயித்து, மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது, வியாபார நோக்கத்தோடு நிர்ணயித்துள்ள கட்டணம்; மிக அதிகமாக இருப்பதால், மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என, கூறியுள்ளார்.