புதர் மண்டிய பூங்கா
குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -1ல் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பு இல்லாமல், மோசமான நிலையில் உள்ளது. பூங்கா முழுவதும் புதர்மண்டி உள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்கும், பெரியவர்கள் நடைப்பயிற்சி செல்லவும் முடியவில்லை. மக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைத்து தர வேண்டும்.
சந்தோஷ்குமார், குறிச்சி.
வேகத்தடை வேண்டும்
பயனியர் மில் ரோடு, எல்லைத்தோட்ட ரோடு சந்திப்பில் அய்யப்பன் கோவில் அருகே, மறைவிலிருந்து அதிவேகமாக வரும் வாகனங்களால், அடிக்கடி விபத்து நடக்கிறது. காலை, மாலை வேளையில் விபத்து அதிகரிக்கிறது. இப்பகுதியில், வேகத்தடை அமைப்பதன் மூலம் விபத்துகளை தடுக்கலாம்.
– சக்தி, பீளமேடு.
நிரம்பி வழியும் சாக்கடை
கணபதி, ஆர்.கே.புரம், கிருஷ்ணா கல்யாண மண்டபம் ரோடு, சைட் நம்பர் ஐந்தில், சாக்கடை கால்வாய் நிரம்பி வீதிகளில் வழிந்தோடுகிறது. குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் கடும் துர்நாற்றமும், கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது.
– சங்கர், கணபதி.
நிரம்பி வழியும் சாக்கடை
தெலுங்குபாளையம் பிரிவு, கலைஞர் நகரில், சாக்கடை கால்வாய் சீரான இடைவெளியில் சுத்தம் செய்யப்படுவதில்லை. சாக்கடை நிரம்பி வழிகிறது. தேங்கி நிற்கும் நீரில், கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகம் உள்ளது. குழந்தைகள், முதியவர்கள் அடிக்கடி காய்ச்சலால் பாதிப்படைகின்றனர்.
– கிருஷ்ணன், கலைஞர் நகர்.
கால்வாயை மூட வேண்டும்
சாய்பாபாகாலனி, என்.எஸ்.ஆர். ரோட்டில், சாந்தி சோசியல் சர்வீஸ் அருகே நடைபாதையில் பாதாள சாக்கடை கால்வாய் மூடியின்றி, திறந்தநிலையில் உள்ளது. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் குழிக்குள் விழுவதற்கு வாய்ப்புள்ளது. விரைந்து கால்வாயை மூட வேண்டும்.
– பார்த்தசாரதி, சாய்பாபா காலனி.
ஆமை வேக பணியால் அவதி
சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, கஸ்துாரிநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன்பு, சாக்கடை அமைக்க, இணைப்புச் சாலை தோண்டப்பட்டது. பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாமல், சிரமத்திற்கு உள்ளாகின்றனர். விரைந்து பணிகளை முடித்து, சாலையை சீரமைக்க வேண்டும்.
– உமானந்தன், சோமையம்பாளையம்.
பள்ளத்தில் இடறும் பாதசாரிகள்
கோவை மாநகராட்சி, 77வது வார்டு, சண்முகராஜபுரம் பகுதியில் பாதாள சாக்கடையில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளது. சாக்கடை சிலேப் உடைந்து பள்ளமாகவும் உள்ளது. இரவு நேரங்களில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர் குழியில், இடறி கீழே விழுகின்றனர்.
– ஜென்சி, சண்முகராஜபுரம்.
ஒலிபெருக்கியில் அதிக ஒலி
செட்டிபாளையம், ஜி.டி.டேங்க் அருகில் உள்ள திருமண மண்டபத்தில், ஒலிபெருக்கியில் அதிக ஒலி வைத்து நிகழ்ச்சி நடத்துவதால், அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– பத்ரி, செட்டிபாளையம்.
ஆக்கிரமிப்பால் நெருக்கடி
வேலாண்டிபாளையம், 42வது வார்டு, டாக்டர் அம்பேத்கர் சாலையில் பழைய இரண்டு சக்கர வாகன விற்பனையகம் உள்ளது. கடைக்கு முன்புள்ள சாலையில், பத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை நிறுத்தியுள்ளனர். குறுகிப்போன சாலையில் பள்ளி வேன், கார் போன்ற வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது.
– அஸ்த், வேலாண்டிபாளையம்.
பூங்கா உபகரணங்கள் பழுது
வடவள்ளி, 38வது வார்டு, குரியா கார்டன் பகுதியில், மாநகராட்சி பூங்கா கடந்த ஓராண்டாக பராமரிப்பின்றி உள்ளது. பூங்கா முழுவதும் குப்பையாக உள்ளது. புதர் மண்டியும், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து, பழுதடைந்தும் காணப்படுகிறது. ஒப்பந்ததாரரிடம் முறையிட்டும் நடவடிக்கையில்லை.
செல்வகுமார், வடவள்ளி