செடிகளில் பழுத்து வீணாகும் தக்காளிகள்

0
63

கிணத்துக்கடவு பகுதியில் செடிகளில் பழுத்து தக்காளிகள் வீணாகிறது. தொடர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பறிக்க முன்வரவில்லை.

தக்காளி விவசாயம்

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் முக்கிய தொழிலாக தக்காளி விவசாயம் உள்ளது. கிணத்துக்கடவு, சொக்கனூர், கல்லாபுரம், வடபுதூர், சிங்கையன் புதூர், நெம்பர் 10 முத்தூர், கோவில்பாளையம், மேட்டுப்பாளையம், சூலக்கல், முள்ளுப்பாடி, கோடங்கிபாளையம், அரசம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தக்காளி செடிகளை பயிரிட்டு வந்தனர். தற்போது கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகளவில் உள்ளது. ஆனால் விலை தொடர்ந்து வீழ்ச்சிடைந்து வருவதால், விவசாயிகள் விரக்தி அடைந்து வருகின்றனர். சில விவசாயிகள் தோட்டங்களில் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். இதனால் தக்காளிகள் பழுத்து வீணாகி வருகிறது. மேலும் செடிகளை வெட்டி அழிக்க தொடங்கியுள்ளனர்.

வேதனை

இதுகுறித்து அரசம்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

கிணத்துக்கடவு பகுதியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளது. ஆனால் 14 கிலோ பெட்டி 100 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இந்த விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாகவில்லை. குறைந்தது 200 ரூபாய்க்கு மேல் தக்காளி விற்பனையானால்தான் செடிக்கு களை எடுப்பது, தக்காளி பறிப்பது உள்ளிட்ட பல்வேறு கூலிகளுக்காவது கட்டுப்படி ஆகும்.

தற்போது குறைந்த விலைக்கு தக்காளி விற்பனையாவதால் எங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது. இதேபோல் தமிழகத்தின் பல மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களிலும் தக்காளி விளைச்சல் அதிகம் உள்ளதால் வெளியூர் வியாபாரிகள் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு வருவதில்லை. இதனால் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக கடும் வேதனையில் உள்ளோம். இதனால் தோட்டத்தில் உள்ள செடிகளில் தக்காளிகளை பறிக்காமல் விட்டு விட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.