கோவை; கோடை காலம் விரைவில் துவங்கவுள்ள நிலையில், கோவையில் வெயில் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால், குளிர்பானங்கள், பழங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் தரமற்ற குளிர்பானங்களை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
வெயில் தாக்கம் மெல்ல அதிகரிக்கும் சூழலில், குளிர்பானங்கள், கம்பங்கூழ், பழச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கமானவர்கள் மட்டுமின்றி, சீசன் நேரம் என்பதால் புதிய சாலையோர கடைகள் ஆங்காங்கே துவக்கப்பட்டு வருகிறது. விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு தர நிர்ணய விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கும் பொழுது எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எண், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, உள்ளிட்ட முழுமையான விபரங்கள் ஸ்டிக்கரில் அல்லாமல் பாட்டில்களில் அச்சிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். மேலும், அதிக நிறங்கள் உள்ள குளிர்பானங்கள், ஐஸ்கீரிம் சுகாதாரம் இல்லாத கடைகளில் பழச்சாறுகள் போன்றவற்றை வாங்கி உண்பதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் சிறப்புக்குழு ஆய்வுகள், பிப்., 15ம் தேதி முதல் துவங்கவுள்ளன. இக்குழு, தொடர் ஆய்வுகளில் ஈடுபடவுள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
வெயில் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், குளிர்பானங்கள், பழச்சாறு, ஐஸ்கிரீம், கம்பங்கூழ் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளன. இனிவரும் நாட்களில் இதன் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும். எப்.எஸ்.எஸ்.ஐ., பதிவு இன்றி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாட்டில்களில் குளிர்பானங்கள் விற்பனை செய்பவர்கள் லேபிள் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும். மேலும், பழச்சாறு விற்பனையில் பிரஷ் ஆன பழங்கள், நல்ல சுத்தமான தண்ணீர், சுத்தமான தயாரிப்பு உபகரணங்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும். சுகாதாரமாக இடங்களை பராமரிக்க வேண்டியது அவசியம்.
உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு ஆய்வுகள் பிப்., 15ம் தேதி துவக்கவுள்ளோம். ஆய்வுகளின் போது மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்படும்.
அழுகிய பழங்கள் பயன்படுத்துவது, பழுக்கவைக்கப்பட்ட பழங்கள் பயன்படுத்துவது, சுகாதாரம் இன்றி இடங்கள் இருப்பது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெற்றோர் குழந்தைகளுக்கு அதிக நிறமிகள் சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை வாங்கி தருவதை தவிர்க்கவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.