சுவர் இடிந்து 17 பேர் பலி: போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும் – சீமான் பேட்டி

0
110

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூரில் சுற்றுச்சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்தது. இதில் வீடுகள் இடிந்து விழுந்து அமுக்கியதில் குழந்தைகள் உள்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நடூருக்கு வந்து வீடுகள் இடிந்த இடத்தை பார்வையிட்டார். அவர், இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடூரில் 17 பேர் உயிரிழந்தது அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் நடந்து உள்ளது. வெறும் கற்களை வைத்து சிமெண்டு வைக்காமல் சுவரை கட்டி உள்ளனர். உரிமையாளரின் வீட்டு கழிவுநீர் சுவர் அருகே விடப்பட்டுள்ளது. அதனால் இதை நான் தீண்டாமை சுவராகத்தான் பார்க்கிறேன்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர்கள் குடியிருந்த இடத்திலேயே வீடுகள் கட்டி தந்தால் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். இதுதொடர்பாக போராடிய வர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தவறு. இந்த வழக்கை திரும்பப்பெற வேண்டும்.
சுவர் குறித்து ஏற்கனவே புகார்களை தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. ஏற்றத்தாழ்வு ஒழிக்கப்பட வேண்டும். அரசின் இழப்பீடு போதுமானதா? மனித உயிருக்கு பணம் இழப்பீடு சரிவருமா?.
போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கோரி முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இறந்தவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்து எரித்திருக்க வேண்டும். ஆனால் அரசு அவசர அவசரமாக இறந்தவர்களின் உடல்களை எரித்தது மிகவும் வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.