சூலுார்: மாவட்டத்தில் பருவ மழை பெய்தாலும், பல்வேறு பகுதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடினாலும், சுல்தான்பேட்டை மேற்கு பகுதி நீர்நிலைகளுக்கு போதிய நீர் வரத்து இல்லாததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தனி குடிநீர் திட்டம் கொண்டு வந்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
சூலுார் தாலுகாவின் தெற்கு பகுதியாக சுல்தான்பேட்டை ஒன்றியம் உள்ளது. 20 தாய் கிராமங்களும், 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் உள்ளன. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது.
கள்ளப்பாளையம், பாப்பம்பட்டி, செலக்கரச்சல், போகம்பட்டி, இடையர்பாளையம், பொன்னாக்காணி, வடவள்ளி, அப்பநாயக்கன்பட்டி, பச்சாபாளையம், பூராண்டாம் பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் ஒன்றியத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளன.
இந்த ஊராட்சிகள் மற்ற பகுதிகளை காட்டிலும் மேடான பகுதியில் அமைந்துள்ளன. அதனால், மழை பெய்தால் நீர் நிலைகளுக்கு மழை நீர் வருவது இயற்கையாகவே குறைவாக உள்ளது. அதன்காரணமாக இந்த, 10 கிராமங்கள், பல ஆண்டுகளாக வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கின்றன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: சுல்தான்பேட்டை மேற்கு பகுதி கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. கீரைகள், பீட்ரூட், தக்காளி, மிளகாய், வெங்காயம், மக்காச்சோளம் ஆகியவை பயிரிடப்படுகின்றன. மேலும், கால்நடைகள் வளர்ப்பு, கோழி வளர்ப்பு அதிகம் உள்ளது.
விவசாயத்துக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் அவசியம். ஆனால், பருவ மழை காலங்களில் கூட நீர் நிலைகளுக்கு மழை நீர் வருவதில்லை. பல ஆண்டுகளாக, குளம், குட்டைகள் வானம் பார்த்த பூமியாக உள்ளன. பருவ மழை காலத்தியே தண்ணீர் இருக்காது. கோடை காலத்தில் கேட்கவா வேண்டும். தற்போது வரை ஆழ்துளை கிணற்று நீரை நம்பித்தான் விவசாயம் நடந்து வருகிறது. 1,700 அடிக்கு கீழ் தான் தண்ணீர் கிடைக்கிறது. குறைந்த தண்ணீரை கொண்டுதான் விவசாயம் செய்கிறோம்.
பி.ஏ.பி., வாய்க்காலில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர கோரினோம். அதுவும் நடக்கவில்லை. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரக்கோரினோம். அதுவும் முழுமை பெறவில்லை. எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முன் வரவில்லை. மாவட்ட நிர்வாகம் சிறப்பு வல்லுனர் குழு அமைத்து, கள ஆய்வு செய்து, நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு வர சிறப்பு திட்டம் வகுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் நெருக்கடியில் கிக்கி உள்ளோம். குடிக்கும் தண்ணீரிலும் பற்றாக்குறை உள்ளது. சுல்தான்பேட்டை பகுதிக்கு என, தனி குடிநீர் திட்டம் கொண்டு வரவேண்டும். அப்போதுதான், அந்த பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.