சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க கோவை குற்றாலத்தில் ‘ ஜிப் லைன்’

0
4

தொண்டாமுத்தூர்; கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை கவர, 2.2 கோடி ரூபாயில் புதிய வசதிகள் ஏற்படுத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு, வாரத்தில், திங்கள் கிழமை தவிர, மற்ற அனைத்து நாட்களும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றன

தினசரி, சராசரியாக ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பண்டிகை நாட்கள் மற்றும் கோடை காலங்களில், 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர். இதன் மூலம் வனத்துறைக்கு வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில், கோவை குற்றாலத்திற்கு, கூடுதலாக சுற்றுலாப்பயணிகளை கவர, 2.20 கோடி ரூபாயில், பல்வேறு புதிய திட்டங்கள் அமல்படுத்த திட்டமிடப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில், கோடைகாலத்தில் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து குறையும் காலம் மற்றும் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதும், சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்படும்.

அதுபோன்ற நேரங்களிலும், மற்ற காலங்களிலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க, ஜிப் லைன் சாகச விளையாட்டு, ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு கயிறு மூலம் நடந்து செல்லும் வசதி, தொங்கு பாலத்தை சீரமைக்கும் பணி என, பல்வேறு வசதிகள், 2.20 கோடி ரூபாய் மதிப்பில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்ட அறிக்கை, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்றனர்.