சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்

0
166

கந்தசஷ்டி

பொள்ளாச்சியில் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தசஷ்டியையொட்டி சூரசம்ஹார விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான விழா கந்தசஷ்டி உற்சவம், காட்டு கட்டுதலுடன் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டி கொண்டனர்.

இந்த நிலையில் கோவில் வளாகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சூரசம்ஹாரம்

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. கோவிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு எஸ்.எஸ்.கோவில் வீதி வழியாக சென்று, சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி சந்திப்பில் முதலாவதாக கஜமுகா சூரனை வதம் செய்கிறார். பின்னர் தெப்பக்குளம் வீதி வழியாக சென்று வெங்கட்ரமணன் வீதி சந்திக்கும் இடத்தில் 2-வதாக சிங்கமுகா சூரனையும், 3-வதாக வெங்கட்ரமணன் வீதி, ராஜாமில் ரோடு சந்திக்கும் இடத்தில் பாலுகோபன் சூரனையும் வதம் செய்கிறார். பின்னர் உடுமலை ரோடு வழியாக சென்று தேர்நிலை திடலில் 4-வதாக சூரபத்மனை வதம் செய்து விட்டு, மீண்டும் கோவிலுக்கு வந்தடைகிறார்.

போக்குவரத்து மாற்றம்

சூரசம்ஹாரத்தையொட்டி பொள்ளாச்சி சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி, வெங்கட்ரமணன் வீதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.