சுந்தராபுரத்தில் பைக்கில் சென்ற வாலிபரை கத்தியால் குத்தி பணம் பறிப்பு: இருவர் கைது

0
6

கோவை, மார்ச் 6: கோவை சுந்தராபுரத்தில் பைக்கில் சென்ற வாலிபரை கத்தியால் குத்தி பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கோவை மதுக்கரை அன்னை நகரை சேர்ந்தவர் பிரபு (24). இவர் சம்பவத்தன்று பைக்கில் மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக சுந்தராபுரம் சென்று கொண்டு இருந்தார். அப்போது வாலிபர்கள் 2 பேர் அவரை வழிமறித்த நிறுத்தினர். பின்னர் திடீரென அவர்கள் பிரபுவை சரமாரியாக தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.

அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார். அதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் பிரபுவை கத்தியால் குத்தி அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர். பிரபுவின் ஜீபேவில் இருந்த ரூ.23 ஆயிரத்து 980யை மிரட்டி அவர்களது வங்கி கணக்கிற்கு மாற்றி கொண்டனர். பின்னர் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பலத்த காயம் அடைந்த பிரபுவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து பிரபு சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கி கணக்கு விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் பிரபுவை கத்தியால் குத்தி ஜீபேவில் பணம் பறித்தது வெள்ளலூர் ரோடு கோனவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த நித்தீஷ் (21) மற்றும் சரவணம்பட்டி அண்ணா நகரை சேர்ந்த கவுதீஸ்வரன் (22) ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.