கோவை : கோடை நெருங்கி விட்டதால், கோவையில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. கடந்த ஒரு வாரமாக, 32 டிகிரி செல்சியஸ்க்கு மேல், வெப்பம் தகிக்கிறது. வெயிலின் தாக்கம், வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெப்பத்தை சமாளிக்க, பொதுமக்கள் சாலையோரங்களில் உள்ள இளநீர், பழச்சாறுகள், பதனீர், நுங்கு, கரும்பு ஜூஸ், கம்மங்கூழ் மற்றும் குளிர்பான விற்பனை கடைகளுக்கு சென்று, தாகம் தணித்து வருகின்றனர்.
தர்பூசணி
வெயில் காலத்தை பொறுத்தவரை தாகம் தணிப்பதில், தர்பூசணிதான் மக்களின் முதல் சாய்ஸ் ஆக உள்ளது. விலை மலிவு என்பது முக்கிய காரணம். ஒரு பிளேட் தர்பூசணி சாப்பிட்டால் தாகம் தீர்வதோடு, பசியும் அடங்கி விடும். ஒரு பிளேட் அல்லது ஒரு கீற்று தர்பூசணி, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முழு பழமாக வாங்கினால் கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
கரும்பு மற்றும் சாத்துக்குடி ஜூஸ்
கரும்பு மற்றும் சாத்துக்குடி ஜூஸ் பிழியும் வண்டிகள், ரோட்டோரங்களில் அதிகரித்து உள்ளன. இளைஞர்கள் பலர் ஐஸ் கட்டி போட்ட, கரும்பு ஜூஸை அதிகம் விரும்பி பருகி வருகின்றனர். பெண்கள் பெரும்பாலும், சாத்துக்குடி ஜூஸை விரும்பி பருகுகின்றனர். வெயில் காலத்தில் பாட்டில் குளிர்பானங்களை இளைஞர்கள் தவிர்த்து வருவது, ஆரோக்கியமான விஷயம்.
நன்னாரி சர்பத்
கோவையில், உச்சி வெயில் காலத்தில் மட்டுமே நன்னாரி சர்பத்தும் மோரும் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. நன்னாரி சர்பத்தின் சுவை பலருக்கு பிடிக்கும் என்பதால், மதிய நேரத்தில் சர்பத் கடைகளில் கூட்டம் அதிகம் இருக்கிறது. அதே போல் நீர் மோர் விற்பனையும் சூடு பிடித்துள்ளது. ஒரு டம்ளர் சர்பத் 25 ரூபாய்க்கும், மோர் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கம்பங்கூழ்
வெயில் காலத்தில் பலர் கம்பங்கூழை, மதிய உணவாக சாப்பிடுகின்றனர். சின்னதாக அரிந்து துாவிய வெங்காயம், கடித்துக் கொள்ள மோர் மிளகாய், வடகமும் அளவின்றி அள்ளித்தருகின்றனர். வாலாங்குளம் ரோடு, உக்கடம் பெரியகுளம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு பகுதிகளில், கம்பங்கூழ் விற்பனை கடைகள் அதிகரித்துள்ளன. ஒரு செம்பு கம்பங்கூழ் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குடித்தால் தாகத்துக்கு மட்டுமல்ல, வயிற்றுப்பசிக்கும் பெரிய புல்ஸ்டாப் வைத்து விடலாம்.
பதனீர், நுங்கு
இளநீர் எல்லா நாட்களில் கிடைக்கிறது. ஆனால் பதனீரும், நுங்கும் இந்த சீசனில் மட்டுமே கிடைக்கும். அதனால் பதனீர் கடைகளை பார்த்தவுடன் வாகனங்களை நிறுத்தி பதனீர் பருகி செல்கின்றனர்.ஒரு டம்ளர் பதனீர் 30 ரூபாய்க்கும், நுங்கு கலந்தபதனீர் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.