கோவை; ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை-2 காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை-2 காலிப்பணியிடங்களை, தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளித்து நிரப்பிட வலியுறுத்தி, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்(கோவை மாவட்டம்) சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் திருஞானம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளர் மோகன் கூறுகையில்,”தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 1,640 சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்கள் காலியாக உள்ளன. கோவை மாவட்டத்தில், 50க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், மக்கள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.