சீலை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

0
104

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஒ.பன்னீர்செல்வம் நுழைந்தார்.

இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால், வருவாய் துறை அதிகாரிகள் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ‘சீல்’ வைத்தனர்.

இதுதொடர்பாக ராயப்பேட்டை போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 14 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கைதான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் – ஈபிஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது காரசார வாதங்கள் நடைபெற்றன. மேலும், போலீஸ் தரப்பில் , தற்போது வரை இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை. சீல் அகற்றினால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும். மேலும் பிரச்சினை ஏற்படலாம் என விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஈபிஎஸ்., ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார்.

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்கு அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்களை அனுமதிக்க கூடாது எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை அடுத்து எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டின் முன் அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.