அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த வன்முறையை தொடர்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்னையை காரணம்காட்டி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இதை ரத்து செய்யக் கோரியும், இந்த உத்தரவுக்கு தடை விதித்து, கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க கோரியும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அலுவலகம் மீது தாக்குதல்
அலுவலகம் மீது தாக்குதல்
அந்த மனுவில், பொதுக்குழுவின்போது கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என கூறி பாதுகாப்பு கோரி கட்சியின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும், உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன், பன்னீர்செல்வம் தனது ஆட்களுடன் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த கோப்புகளை எடுத்துச் சென்றுள்ளார் என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
சொத்து உரிமை பிரச்சனை
இதுசம்பந்தமாக புகார் அளித்தும், காவல் துறையினர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, அதிமுகவினர் 14 பேரை கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சொத்து உரிமை தொடர்பாக பிரச்னை இருந்தால் மட்டுமே சீல் வைப்பதற்கான சட்டப்பிரிவுகளை அமல்படுத்த முடியும் எனவும், அதிமுக தலைமை அலுவலகத்தை பொறுத்தவரை, சொத்து உரிமை தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லை எனவும், கட்சியின் தலைமை நிலைய செயலாளர், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சி அலுவலகத்தின் உரிமை தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உத்தரவு ரத்து
பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது கட்சி அலுவலகத்தை சீல் வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி ஓ.பன்னீர்செல்வமும், சீல் வைத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவில் எதிர்மனுதாரராக எடப்பாடி பழனிச்சாமியை இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பூர்வ உரிமை
ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், எடப்பாடி பழனிச்சாமி, தன்னை பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டது உரிமையியல் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது எனவும், இதுநாள் வரை எந்த நீதிமன்றமும் தன்னை ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றோ, எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் என்றோ அறிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சி தலைமை அலுவலகத்துக்குள் நுழைய தனக்கு எல்லா சட்டப்பூர்வ உரிமைகளும் உள்ளதாகவும், கட்சி தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்ட போது அது தங்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
அலுவலகத்தை ஒப்படைக்க வேண்டும்
அதிமுக தலைமை அலுவலகத்தின் உரிமை தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டது என்பது தொடர்பானன எந்த ஆதாரங்களும் இல்லாமல், முறையாக விசாரணை நடத்தாமல் சீல் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து அலுவலகத்தை தங்கள் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரியுள்ளார்.
இந்த இரு வழக்குகலும் ஐகோர்ட்டு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று விசாரணைக்கு வர உள்ளது.