சீனாவின், லியோனிங் மாகாணம், டாலியன் நகரத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுடன் கடந்த 8-ந்தேதி இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். சீனாவில் இருந்து நேரடியாக மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவிற்கு சுற்றுலா வந்த அவர்கள், கடந்த 20-ந் தேதி கோவைக்கு வந்துள்ளனர்.
பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள் நேற்று ஆலாந்துறை அருகே உள்ள ஆன்மிக மையத்திற்கு சென்றுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆன்மிக மையத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில்லை என்ற மருத்துவ சான்றிதழ் அளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால், சீனாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சான்றிதழ் பெற சென்றுள்ளனர். சீனப் பயணிகளுக்கு சளித்தொற்று இருந்த நிலையில் மருத்துவ சான்றிதழ் வழங்கப்படவில்லை. இவர்கள் குறித்த தகவல் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளை மீட்டு அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியிலேயே விட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை துணை இயக்குனர் ஜி.ரமேஷ்குமார் கூறியதாவது:- சீனாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சளித்தொற்று மட்டுமே உள்ளது. மற்றபடி காய்ச்சல், இருமல் போன்ற வேறு எந்த அறிகுறிகளும் இல்லை. இருந்தும் 4 பேரும் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை விட்டு ஒரு வாரத்திற்கு வெளியேற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களை கண்காணிக்க மருத்துவக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன. தவிர உகான் நகரத்திற்கும் அவர்கள் வசிக்கும் டாலியன் நகருக்கும் 1,500 கிலோ மீட்டர் தூரம் உள்ள தாக தெரிவித்துள்ளனர். இருந்தும் பாதுகாப்புக் கருதி தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்,10 நாள் கண்காணிப்பில் வைத்து உள்ளோம்.
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளனர். கோவை ஆலாந்துறை பகுதியில் உள்ள ஆன்மிக மையத்துக்கு சீன நாட்டினர் வந்தால் தகவல் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் சீனாவில் இருந்து இலங்கை வழியாக 5 பேர் நேற்று விமானம் மூலம் கோவை வந்தனர். கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த இவர்களுக்கு, கோவை விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது. இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
இருந்தாலும் இவர்களை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் இவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கடந்த சில நாட்களாக சீனாவில் இருந்து இதுவரை கோவைக்கு மொத்தம் 18 பேர் வந்து சொந்த ஊர்களுக்கு சென்று இருப்பதாகவும், இவர்களை அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.
கோவை ரெயில் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்கள் முக கவசம் அணிந்த படி பணியாற்றுகிறார்கள். இதேபோல் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்களும் முக கவசம் அணிந்து பணியாற்றுகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் சீனாவில் உள்ள உகான் மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சீனாவில் இருந்து நேபாளம், பெங்களூரு வழியாக கடந்த 29-ந் தேதி தனது வீட்டுக்கு வந்தார்.
இதை அறிந்த நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறையினர் மாணவியின் கிராமத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது மாணவிக்கு கெரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினர்.
மாணவி வீட்டில் தனி அறையில் தங்க வேண்டும். மேலும் அறை எந்த நேரமும் வெப்பமாக இருக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். காய்ச்சல் அறிகுறி எதுவும் இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று நிலைமையை எடுத்து கூற வேண்டும்.அங்கு ரத்த பரிசோதனை செய்யப்படும். இவ்வாறு 14 நாட்களுக்குள் எந்த அறிகுறியும் தென்படவில்லை என மருத்துவ அறிக்கை பெற வேண்டும். அதன்பின் எந்த இடங்களுக்கும் செல்லலாம் என்று சுகாதாரத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் சீனாவில் இருந்து மாணவி வந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர் நன்றாக உள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால் கேரளாவில் சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால் நீலகிரி-கேரள எல்லைகளில் மருத்துவ பரிசோதனை மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொள்ள முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.