கோவை, பிப். 28: கோவை வருவாய் மாவட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று இரவு ராஜ வீதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் தேர்வு மைய அறை கண்காணிப்பாளர் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலை வெளியிட்டு, ஆசிரியர்களின் பணி மூப்பு அடிப்படையில் தேர்வு பணிகளை ஒதுக்க வேண்டும்.
அறை கண்காணிப்பாளர் பணியிடங்கள் குலுக்கல் முறையை பின்பற்றாமல், அலுவலக பணியாளர்களால் நிரப்பும் பழைய முறையை பின்பற்ற வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு பணி ஒதுக்கீடு செய்யும் போது பணியாளர் விவர பட்டியலில் உள்ள வீட்டு முகவரியை அடிப்படையாக கொண்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அறை கண்காணிப்பாளர் தேர்வு பணி ஆசிரியர் பணியாற்றும் பள்ளியில் இருந்து 6 கிமீ தொலைவிற்குள் அல்லது ஆசிரியர் வீட்டின் அருகில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த நிலையில் முதன்மை கல்வி அலுவலர் மனமொத்த மாறுதல் பணி ஆணைகளை வழங்குவதாக உறுதி அளித்தார். இதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.