சிவ சிவா … இதென்ன இப்படி மழைவெள்ளம் வந்தது எப்படி?

0
5

தொண்டாமுத்தூர்; பேரூர் பகுதியில் பெய்த கனமழையால், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்பிரகாரத்தில் மழைநீர் தேங்கியதால், பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

பேரூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று மாலை, கனமழை பெய்தது. இதனால், சிறுவாணி ரோடு, தொண்டாமுத்தூர் ரோடு, நரசீபுரம் ரோட்டில், பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இந்நிலையில், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு, நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

அப்போது பெய்த கனமழையால், கோவில் உள்பிரகாரம் முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

சுமார், 30 நிமிடங்களுக்குப் பின்பு, உள்பிரகாரத்தில் தேங்கி இருந்த நீரை கோவில் பணியாளர்கள், மோட்டார் பயன்படுத்தி வெளியேற்றினர்.

ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவிலில், கடந்த மாதம் 10ம் தேதி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. முறையாக வடிகால் வசதிகள் பராமரிக்காததால், மழைநீர் தேங்கியதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் (பொ) விமலாவிடம் கேட்டபோது, ”கும்பாபிஷேகம் நடைபெற்றதால், வடிகாலில், பூக்கள் அடைத்திருக்கலாம். அனைத்து வடிகால்களும் உடனடியாக சுத்தம் செய்யப்படும்,” என்றார்.