சிறுவாணி அணையின் நீர்மட்டம் 36 அடியாக உயர்வு

0
74

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்வதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்து உள்ளது. குளங்க ளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

பருவமழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதை யொட்டி கோவையிலும் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்தது.

இதனால் கடந்த வாரம் 13 அடியாக இருந்த சிறுவாணி அணை யின் நீர் மட்டம் 36 அடியாக உயர்ந்து உள்ளது. அணையில் இருந்து 25 கோடி லிட்டர் தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியில் 100 மி.மீட்டர் மழை பதிவானது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

நொய்யல் ஆற்றில் வெள்ளம்

மழை காரணமாக கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க ஒரு வாரமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதுபோன்று நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ அல்லது ஆற்றை கடக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று பொதுமக்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தடுப்பணைகள் நிரம்பின

மேலும் சித்திரைச்சாவடி அணைக்கட்டு, குனியமுத்தூரில் உள்ள சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை ஆகியவை நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

கோவை புதுக்குளம், கோளராம்பதி, நரசாம்பதி, குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் குளங்கள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.