சிறுமுகை அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு; கலெக்டரிடம் மனு

0
118

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறுமுகை அருகே உள்ள ரங்கம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

சிறுமுகை அருகே உள்ள ரங்கம்பாளையத்தில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகிறோம். நாங்கள் பெரும்பாலும் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில் எங்களது கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே எங்களது கிராமத்துக்கு அருகில் உள்ள பெத்திக்குட்டை பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது.

எனவே எங்கள் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மதுக்கடை திறக்கப்பட்டால் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே டாஸ்மாக் மதுக்கடையை திறக்கும் முடிவை அதிகாரிகள் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி ஜமீன்கோட்டாம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–

தனியார் நர்சிங் கல்லூரியில் 23 மாணவிகள் நர்சிங் பட்டயப்படிப்பு படித்தோம். கடந்த 2016–ம் ஆண்டு படித்து முடித்த நாங்கள் கோவையில் 6 மாதங்கள் செய்முறை பயிற்சி முடித்தோம். ஆனால் தற்போது வரை எங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இதனால் வேலைக்கு செல்லவோ அல்லது உயர்படிப்பு படிக்கவோ முடியாத நிலை உள்ளது. எனவே எங்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. சூலூரை சேர்ந்த தங்கராஜ் அளித்த மனுவில், சூலூர் பகுதியில் நொய்யல் ஆறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று இருந்தது.