மேட்டுப்பாளையம், ஜன.17: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை அருகே உள்ள பகத்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு பசி, பஞ்சம், பட்டினி மற்றும் கடும் நோய்களால் பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதனால், இரணியன் தெருக்கூத்து நடத்தி நாராயணனை வேண்டி அப்பகுதி மக்கள் பிரார்த்தனை செய்தனர். அதன் பிறகு அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொன்று தொட்டு பாரம்பரியமாக ஒவ்வொரு ஆண்டும் தை 2ம் தேதி இரணியன் தெருக்கூத்து நாடகம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தெருக்கூத்து நாடகம் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு துவங்கியது.
நாடக ஒருங்கிணைப்பாளர்கள் நடராஜ், தண்டபாணி மற்றும் குழுவினர் தெருக்கூத்து நாடகத்தை சிறப்பாக வழி நடத்தினார்கள். தெருக்கூத்து நாடகத்தில் பக்த பிரகலாதனாக பாஸ்கர், நரசிம்மராக ஞானசங்கர், இரணியனாக மூர்த்தி, குமார், வீரேந்திரன், எமதர்ம ராஜாவாக ரமேஷ், லீலாவதியாக கனகராஜ், ராஜேஷ், சுக்லாச்சாரியார் குமார் மற்றும் குழுவினர் பங்கேற்றனர்.
ஓம் இரணியாய நமஹ என்று கூறு என இரணியன் பக்த பிரகலாதனை பார்த்து சொல்ல முடியாது. ஓம் நமோ நாராயணா என்று மட்டும் தான் சொல்லுவேன் என்று கூற உங்கள் நாராயணன் எங்கே இருக்கிறார்? என்று கேட்க தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் என்று பிரகலாதன் கூற இந்த தூணில் நாராயணன் இருப்பாரா? என்று இரணியன் கடாயுதத்தால் தூணை அடிக்க அதிலிருந்து எம்பெருமான் நாராயணன் உக்கர நரசிம்மராக தோன்றி தன் மடியிலே இரணியனை கடத்தி வதம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின்னர், ஏராளமான பொதுமக்கள் நரசிம்ம மூர்த்திக்கும், பக்த பிரகலாதனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.