துடியலூர் அருகே உள்ள கணுவாய் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 46). கூலித்தொழிலாளி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் நேற்று காலை திருவள்ளுவர் நகர் அடிவார பகுதியில் ஆட்டை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். இதில் ஒரு ஆடு மட்டும் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்று இறந்த ஆட்டை பார்வையிட்டனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த கால் தடயங்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கால் தடம் சிறுத்தையின் தடம் என்பது தெரியவந்தது. மேலும் சிறுத்தைதான் ஆட்டை அடித்துக் கொன்றது தெரியவந்தது. சிறுத்தை ஒன்று ஆட்டை தாக்கி கொன்ற சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.