நதிநீர் இணைப்பு, சிறந்த நீர் மேலாண்மை, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்து, விவசாயத்தை செழிப் படையச் செய்யவேண்டும் என்பது, விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வேலுசாமி, தலைவர், பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கம்:
விவசாயம் செழிப்படைய சிறந்த நீர் மேலா ண்மை மற்றும் பங்கீடு அவசியமாகிறது. பி.ஏ.பி., பாசன வாய்க்கால்களை நவீன முறையில் சீரமைத்து, நீர் இழப்பை குறைக்க வேண்டும். விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, சீரான இடைவெளியில் தண்ணீர் வழங்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.
காளிமுத்து, தலைவர், தமிழ்நாடு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்:
உள் நதிநீர் இணைப்பு திட்டத்தில், உடுமலை அமராவதியிலிருந்து வீணாகும் தண்ணீரை, வறட்சி நிலையில் உள்ள உப்பாறு, நல்லதங்காள், வட்டமலைக்கரை அணைக்கு திருப்பும் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2008ல் உருவானது.
திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டபோதும், இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் அரசு கைவிட்டுவிட்டது. அமராவதியில் வீணாகும் தண்ணீரை உப்பாறு அணைக்கு திருப்பும் திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்கவேண்டும். மேற்கு மண்டல விவசாயிகளின் நீராதார தேவையை பூர்த்தி செய்யவேண்டும்.
பொன்னுசாமி, மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்கம்:
விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை அரசு உறுதிப்படுத்தவேண்டும். பி.ஏ.பி., பாசன நீர், கடைமடை வரையிலான விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும். குளம், குட்டைகள் அனைத்தையும் துார்வரி, மழைக்காலங்களில் நீர் நிரம்பச் செய்யவேண்டும்.