கோவை, ; சிறந்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், கோவை யுனைடெட் கல்விக் குழுமம் மற்றும் எலைட் சங்கமும் இணைந்து, ‘நல்லாசிரியர் விருது’ வழங்கி கவுரவித்தனர்.
கோவை யுனைடெட் கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சண்முகம், விழாவிற்கு தலைமை வகித்தார். இதில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 110 பள்ளிகளின் 305 ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர், கோவை ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் கவிதாசன் பேசுகையில், ”நல்ல குணநலன், தைரியம், திறமை, அர்ப்பணிப்பு , படைப்பாற்றல் ஆகியவற்றை மாணவர்களிடையே ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும். அன்பு, கண்டிப்போடும் கல்வியை கற்று தரும் ஆசிரியர்களை, மாணவர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்; வணங்குவார்கள்,” என்றார்.
கோவை ரோட்டரி எலைட் சங்கத்தின், மாவட்ட கவர்னர் சுந்தர வடிவேலு, ரோட்டரி எலைட் சங்கத்தின் துணை கவர்னர் ராம நாதன், கோவை மாவட்ட தொழில்கல்வி விருது துறையின் நிறுவனர் ரமேஷ், யுனைடெட் கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் கைலாஷ் குமார் ஜெயின், செயலாளர் அருண்கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.