சிரியா மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை நீக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
சவூதியின் ரியாதில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில், டொனால்டு டிரம்ப் பேசியதாவது:இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான அணு ஆயுதப்போரை நான் தான் நிறுத்தினேன். அது ஒரு மோசமான அணுசக்தி போராக இருந்து இருக்கலாம். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளில் சிறந்த தலைவர்கள் உள்ளனர். அவர்கள் பற்றி எனக்கு நன்றாக தெரியும்.
நாம் வர்த்தகம் செய்வோம் என்று சொன்னேன். எல்லாம் நின்றுவிட்டது. நிலைமை அமைதியாக இருக்கும் என்று நம்புகிறேன். அவர்கள் ஏவுகணைகளுக்கு பதிலாக பொருட்களை வர்த்தகம் செய்ய வேண்டும். பதற்றம் மேலும் அதிகரித்திருந்தால், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கக் கூடும்.
பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சிரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சிரியா பின்னடைவை சந்திக்க அவை ஒரு முக்கிய பங்காற்றின. ஆனால் இப்போது சிரியா முன்னேற வேண்டும் என்பதால் அந்த தடைகளை நீக்க உத்தரவிடுகிறேன். சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷராவின் நிர்வாகத்திற்கு இது பெரிய உதவியாக இருக்கும்.
தற்போது சிரியாவிற்கு முன்னேறும் நேரம் வந்துவிட்டது. சிரியா மீண்டும் அமைதியும், வளர்ச்சியும் அடைந்த நாடாக மாறும். இவ்வாறு டிரம்ப் பேசினார். சிரியா மீதான தடைகளை நீக்க சவூதி அரேபியாவின் இளவரசர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பொருளாதார தடையை டிரம்ப் நீக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.