சிங்கவால் குரங்குகள் ரோட்டில் நடமாட்டம் சுற்றுலா பயணியருக்கு வனத்துறை அறிவுரை

0
15

வால்பாறை : வால்பாறையில், சிங்கவால்குரங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் சுற்றலா பயணியர் மிகவும் கவனமாக வானங்களை இயக்க வேண்டும் என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை அமைந்துள்ளது. இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களிலும், வரையாடு, சிங்கவால்குரங்குகள் அதிக அளவில் உள்ளன.

இந்நிலையில், வால்பாறை புதுத்தோட்டம் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் உள்ளன. மிகவும் கூச்ச சுபாவமுடைய இந்த வகை குரங்குகள் வனத்தில் கிடைக்கும் பழங்களை உணவாக உட்கொள்கின்றன.

சிங்கவால்குரங்குகள் ரோட்டில் துள்ளி விளையாடுவதை தவிர்க்க, வனத்துறை சார்பில் ஐந்து இடங்களில் ஊஞ்சல் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இவை சில நேரங்களில் ஆபத்தை உணராமல் ரோட்டில், விளையாடுவதும், குடியிருப்பு பகுதிக்குள் சென்று உணவு தேடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

வால்பாறையில் தற்போது பருவமழைக்கு பின் குளுகுளு சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணியர் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில், பருவமழைக்கு பின் வனவளம் செழிப்பாக உள்ளது. வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, குடிநீர் போதுமான அளவு கிடைக்கிறது. பொள்ளாச்சி ரோட்டில் சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் நடமாடுவதால், இந்தப்பகுதியில் சுற்றுலா பயணியர் வாகனங்களை மிக கவனமாக இயக்க வேண்டும்.

குடியிருப்பு பகுதிக்குள் வரும் சிங்கவால் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவு வழங்க வேண்டாம். உணவு வழங்குவதால், இயற்கையாக உணவு தேடும் அவற்றின் இயல்பு மாறி விடும். வனத்துறை எச்சரிக்கையை மீறினால் வன உயிரினபாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, கூறினர்.