சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளை மகிழ்விக்க இன்னிசை ஒலிபரப்பு

0
86

சிக்னல்கள்

கோவையில் அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை ஆகிய சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் ஆங்காங்கே போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. அங்கு போக்குவரத்தை கண்காணிக்க போலீசாரும் நியமிக்கப்படுகிறார்கள்.

சில சிக்னல்களில் வாகன ஓட்டிகள் கூடுதல் நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது வாகன ஓட்டிகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதை போக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்னிசை ஒலிபரப்பு

இதையடுத்து போக்குவரத்து சிக்னல்களில் இன்னிசை ஒலிபரப்ப முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் கோவையில் இன்று (திங்கட்கிழமை) முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக சிக்னல்களில் ஒலிப்பெருக்கிகள் வைக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-

கோவை – அவினாசி ரோட்டில் லட்சுமி மில் சந்திப்பு, ஹோப் காலேஜ், சிங்காநல்லூர் ஆகிய சிக்னல்களில் இன்று முதல் இன்னிசை ஒலிபரப்பும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி இந்த சிக்னல்களில் சிவப்பு நிற விளக்கு ஒளிர்ந்ததும், அங்குள்ள ஒலிப்பெருக்கியில் இன்னிசை பாடல்கள் ஒலிக்கப் படும்.

போக்குவரத்து விழிப்புணர்வு

மேலும் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்களும் அவ்வப் போது ஒலிபரப்பு செய்யப்படும். இதனால் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு மனஅழுத்தம் ஏற்படாது. இது போல் மற்ற சிக்னல்களிலும் இன்னிசை ஒலிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்