சாலை விரிவாக்க பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடவு-நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

0
73

பொள்ளாச்சி கோட்டத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரக்கன்றுகள் நடவு

நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் ஏற்படுவதால் முக்கிய சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது பல்லடம் ரோடு, கோட்டூர் ரோடு, மீன்கரை ரோடு மற்றும் கிராமத்து சாலைகளும் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சாலை அகலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன.

வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக மரங்களை நட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதால் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை அகலப்படுத்தப்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ராசக்காபாளையம், பில் சின்னாம்பாளையம், கிணத்துக்கடவு உள்பட முக்கிய சாலைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

1000 மரக்கன்றுகள்

சாலை விரிவாக்க பணிக்காக ஆய்வு செய்து வருவாய் துறை மூலம் அனுமதி பெற்று தேவையான மரங்கள் மட்டும் வெட்டப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் மறுநடவு செய்ய கூடிய மரங்களை வெட்டாமல் வேரோடு புடுங்கி மற்ற பகுதிகளில் நடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாலை அகலப்படுத்தப்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை பகுதிகளில் 1000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. தற்போது இந்த பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்று உள்ளது. மரக்கன்றுகளை நட்டு அவற்றை கால்நடைகள் சேதப்படுத்தாமல் இருக்க கூண்டு வைக்கப்படுகிறது. மேலும் நெடுஞ்சாலைத்துறை மூலம் தண்ணீர் ஊற்றி பாராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பராமரிக்க வேண்டும்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி வரவேற்கதக்கது. ஆனால் அதே நேரத்தில் மரக்கன்றுகளை முறையாக பராமரிக்க வேண்டும். சில இடங்களில் பராமரிக்காமல் விடுவதால் மரக்கன்றுகள் கருகி போய் விடுகிறது. இதேபோன்று மறுநடவு செய்யப்படும் மரங்களையும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து, மரங்கள் வாடாமல் இருக்க தண்ணீர் ஊற்றுதல் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க வேண்டும் என்றனர்.