விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு, 44 வகையான தொழிலாளர் நலச்சட்டங்களை 4 சட்டங்களாக திருத்தி உள்ளதற்கு கண்டனம், காலிப்பணியிடங்களை நிரப்ப கோருதல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் 21,000 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும், பி.எப். போனஸ், பணிக்கொடை உச்ச வரம்புகளை நீக்கவும், சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்களான ஏ.ஐ.டியு.சி., ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.சி.சி.டி.யு. மற்றும் எல்.பி.எப்., எம்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
இதையொட்டி கோவையில் பெருவாரியான தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தலைமை தபால் தந்தி அலுவலகத்தின் முன்பு நேற்றுக் காலை 10 மணிக்கு திருப்பூர் எம்.பி.யும், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. தலைவருமான கே.சுப்பராயன் மற்றும் கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. பி.ஆர்.நடராஜன் ஆகியோர் தலைமையில் ஏராளமான தொழிலாளர்கள் திரண்டனர்.
அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதில், தாரை வார்க்காதே, தாரை வார்க்காதே, அரசு தொழிற்சாலைகளை தனியாருக்கு தாரை வார்க்காதே, கட்டுப்படுத்து, கட்டுப்படுத்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து என்பன உள்பட பல்வேறு கோஷங்களை அவர்கள் எழுப்பினார்கள். ஒவ்வொரு தொழிற்சங்கத்தினரும் சங்க கொடியுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது திடீரென்று போராட்டக்காரர்கள் சிலர் அந்த வழியாக வந்த வாகனங்கள் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஸ்டேட் பாங்க் சாலையில் ஒரு பக்கத்தில் சென்று கொண்டிருந்த போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட கே.சுப்பராயன் எம்.பி. கூறியதாவது:-
மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. தொழிலாளர் நலனில் அக்கறை காட்டவில்லை. இந்தியா முழுவதும் 25 கோடி தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடக்கும் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு பிறகாவது மத்திய அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மறியல் போராட்டத்தில் வி.ஆர்.பாலசுந்தரம், ஜி.சீனிவாசன்(ஐ.என்.டி.யு.சி.), மாநில துணைத்தலைவர் எம்.ஆறுமுகம், மாவட்ட பொதுசெயலாளர் சி.தங்கவேல்(ஏ.ஐ.டி.யு.சி.), மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், துணைச்செயலாளர் ஆர்.தேவராஜ்(இந்திய கம்யூனிஸ்ட்), டி.எஸ்.ராஜாமணி, மனோகரன்(எச்.எம்.எஸ்.), சி.பத்மநாபன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி (சி.ஐ.டி.யு), ரத்தினவேலு, நாச்சிமுத்து(எல்.பி.எப்), மு.தியாகராஜன், ஏ. பழனிசாமி(எம்.எல்.எப்.), ஆர்.தாமோதரன்(ஏ.ஐ.சி.சி.டி.யு), ஹசன்பாபு(எஸ்.டி.டி.யு.) மற்றும் எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கம் சார்பில் கணபதி சிவக்குமார், ஆனந்தராஜ், ராமசாமி, உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். சாலை மறியல் போராட்டம் தொடர்பாக ஆயிரத்து 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்றுக்காலை விமான நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க கிளை செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மேலும் சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தினால் விமான நிலைய சேவையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. விமானங்கள் வழக்கம் போல வந்து சென்றன.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்டத்தில் நேற்று வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதில் 15 அலுவலகங்களில் பணியாற்றிய 450 ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன. ஆனால் இதில் அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இணைச்செயலாளர் கிரிஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல மத்திய அரசை கண்டித்து கோவை ரேஸ்கோர்சில் உள்ள வருமானவரித்துறை ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன. மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்டத்தில் நேற்று நடந்த வேலைநிறுத்தத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 100 சதவீதம் பேர் கலந்து கொண்டதாக சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறினார்.
கோவை பூ மார்க்கெட்டில் ஆட்டோ டிரைவர்கள் மறியலில் ஈடுபட்டனர். ஆட்டோ ஓட்டுனர் சங்க கூட்டு கமிட்டித் தலைவர் சுகுமாறன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் முன்பு மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
வேலைநிறுத்தம் காரணமாக கேரளாவில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசு பஸ்கள் நேற்று நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக கோவை உக்கடம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கோவையில் இருந்து கேரளாவுக்கு சென்ற லாரிகளும் நேற்றுக்காலையில் வாளையாறு சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டன. அந்த லாரிகள் நேற்று மாலை 6 மணிக்கு பிறகே கேரளா புறப்பட்டு சென்றன. ஆனால் கோவையில் அனைத்து பஸ்களும் ஓடின. கடைகள் திறந்திருந்தன.