பெ.நா.பாளையம்; கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற, தேசிய நெடுஞ்சாலைத்துறை வருகிற 24ம் தேதி வரை கெடு விதித்துள்ளது.
‘
கோவை-மேட்டுப்பாளையம் ரோடு, கடந்த, 2010ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், 70 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யும் பணி நடந்தது. அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், வெறும் மரங்களை மட்டுமே அகற்றி விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஆனால், அதற்குப் பிறகு வழக்கத்தை விட, சாலையோர ஆக்கிரமிப்புகள் அளவுக்கு அதிகமாக மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, மாலை, 4:00 மணிக்கு பிறகு இரவு, 10:00 மணி வரை நடமாடும் சாலையோர கடைகளால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன.
காய்கறி கடைகளும் முளைத்தன. இதனால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருந்தது.
குறிப்பாக, போலீசாரிடம் ஆக்கிரமிப்பு குறித்து கூறினால், நெடுஞ்சாலை துறை இடம் முறையிட வேண்டும் என திருப்பி அனுப்புகின்றனர். நெடுஞ்சாலை துறையினரிடம் சென்றால், அந்தந்த பகுதி பேரூராட்சி, நகராட்சியை சேர்ந்தவர்களே பொறுப்பு என, தட்டிக் கழிக்கின்றனர். உள்ளாட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை ரோட்டின் ஆக்கிரமிப்பாளர்களை, தங்களால் அகற்ற முடியாது என, கை விரிக்கின்றனர்.
கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையத்தில் இருந்து மத்தம்பாளையம் வரை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சாலையோர கடைகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்களும், கோயம்புத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினரும் தொடர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கோவை தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட இன்ஜினியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில், ஜி.என். மில்ஸ் பிரிவு முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பொது மக்களுக்கும் இடையூறுகள் ஏற்படுகின்றன. கோவை கலெக்டர் தலைமையில் நடந்த சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில், இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் சாலையின் இருபுறமும், ஓரங்களிலும், தங்களால் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ, கூரை, சாலை திட்டுக்கள், விளம்பர பலகைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை தாங்களாகவே முன்வந்து இம்மாதம், 24ம் தேதிக்குள் அகற்றிக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தவறும் பட்சத்தில், 24ம் தேதிக்குப்பின் இத்துறை வாயிலாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அவ்வாறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் போது, ஏற்படும் பொருள் சேதத்திற்கு இத்துறை எவ்விதத்திலும் பொறுப்பு ஏற்காது எனவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்படும் செலவுக்கு ஆக்கிரமிப்பாளர்களே பொறுப்பு எனவும், அறிவிக்கப்படுகிறது’ என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு ரோட்டுக்கு வாடகை வசூல்
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,’தற்போது, நரசிம்மநாயக்கன்பாளையம் வரையுள்ள ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்படும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி, கூடலூர் நகராட்சி, வீரபாண்டி பேரூராட்சி, பிளிச்சி ஊராட்சி உட்பட்ட மேட்டுப்பாளையம் ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், சிலர் மேட்டுப்பாளையம் ரோட்டில் தங்கள் வீடுகள் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கின்றனர்’ என்றனர்.