கோவை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்கம் சார்பில், பொதுச்செயலாளர் ஆர்.சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் விளாங்குறிச்சி பகுதியில், ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை சேர்ந்தவர்கள், ஸ்ரீகாஞ்சி நகர் விரிவு பகுதியில் சுமார் 30 அடி அகல ரோட்டை ஆக்கிரமித்து, ரெடிமேடு காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளனர்.
இதன்காரணமாக, அப்பகுதியில் பொது வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. சுற்றுவட்டார பகுதி மக்கள், போக்குவரத்துக்காக அந்த ரோட்டை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு நடத்தி, ரோட்டின் குறுக்கே வைக்கப்பட்டுள்ள ரெடிமேடு காம்பவுண்ட் சுவரை அகற்றி, பொது போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.