கோவை, மார்ச் 29: கோவை சித்தாபுதூர் பகுதியில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை சித்தாபுதூரில் கார் ஒன்று பல்வேறு கடைகளுக்கு பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. நேற்று நீண்ட தூர பயணத்தை முடித்துவிட்டு அந்த காரை சித்தாபுதூர் பகுதியில் டிரைவர் நிறுத்திச் சென்றுள்ளார். பின்னர், காரின் டிரைவர் வண்டியை மீண்டும் இயக்க முயன்றபோது, திடீரென காரில் இருந்து புகை வர ஆரம்பித்தது.
உடனே டிரைவர் காரை நிறுத்திவிட்டு, புகை வந்த இடத்தில் தண்ணீரை ஊற்றினார். அப்போது, திடீரென கார் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் அருகில் கடைகளில் இருந்து தீயணைப்பான்களைக் கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சித்தார். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. பின்னர் இது குறித்து மத்திய தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.