மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடையே ஒருங் கிணைப்பு இல்லாததால் 11 சாலைகளில் சீரமைப்பு பணிகள் தாமதம் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
மாநகராட்சி சாலைகள்
கோவை மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகள் உள்ளன.
இதில் மாநகராட்சி வசம் இருந்த சாலைகளை மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைப்பது தொடர்பாக சாலை பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
இதில், மாநகராட்சி வசம் இருந்த 11 சாலைகளை மாநில நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் ஒப்படைக்க முடிவு செய்து ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்பேரில் அந்த 11 சாலைக ளும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
மாநில நெடுஞ்சாலையிடம் ஒப்படைப்பு
அதன்படி,1. அவினாசி சாலையில் பன்மால் முதல் ராஜலட்சுமி மில் வரை 3.20 கிலோமீட்டர் இருவழித்தடம், 2.நவ இந்தியா சந்திப்பு முதல் மேட்டுப்பாளையம் சாலை (வழி சின்னசாமி சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி) 4.70 கி.மீ, 3. அவினாசி ரோடு ஜென்னி ரெசிடென்சி (கணபதி சாலை முதல் சத்தி சாலை வரை) 6.60 கி.மீ.,
4. தண்ணீர் பந்தல் சாலை (அவினாசி சாலை முதல் விளாங்குறிச்சி சந்திப்புவரை) 4.40 கி.மீ., 5. புட்டுவிக்கி சாலை முதல் சுண்டக்காமுத்தூர் சாலை கோவைப் புதூர் வரை 3.20 கி.மீ.,
6. திருச்சி சாலை சிங்காநல்லூர் முதல் வெள்ளலூர் நொய்யல் பாலம் வரை 2.20 கி.மீ., 7. மாவட்ட கலெக்டர் அலுவலம் முதல் ஆவாரம்பாளையம் சத்திசாலை வரை 3.30 கி.மீ.,
8. உக்கடம் முதல் சிவாலயா சந்திப்பு பேரூர் பிரதான சாலைவரை 3 கிலோ மீட்டர், 9. பொன்னையராஜபுரம் ராமமூர்த்தி சாலை முதல் குனியமுத்தூர் பாலக்காடு சாலைவரை 4 கி.மீ.,
10. பொள்ளாச்சி சாலை சிட்கோ முதல் பாலக்காடு சாலை சுகுணாபுரம் வரை 3 கி.மீ., 11. சங்கனூர் சாலை (சத்திசாலை முதல் மேட்டுப்பாளையம் சாலை வரை) 3.50 கி.மீ. ஆகிய 11 சாலைகள் மாநில நெடுஞ்சாலை துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
சீரமைப்பது யார்?
இதில் பல சாலைகள் மழை காரணமாக அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. அதை சீரமைப்பது தொடர்பாக மாநகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை இடையே இழுபறி நீடித்து வருகிறது.
சுண்டக்காமுத்தூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதை நெடுஞ்சாலைத்துறைதான் சீரமைக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள்.
மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்த பிறகு நாங்கள் சீரமைத்தால் கணக்கு தணிக்கையின்போது சிக்கல் ஏற்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஆனால் அந்த சாலைகளை முழுமையாக ஒப்படைக்காததால் மாநகராட்சி நிர்வாகம்தான் சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் கைவிரிக்கிறார்கள்.
வாகன ஓட்டிகள் அவதி
இது போன்ற காரணங்களால் கடந்த ஒரு மாதமாக சுண்டக்கா முத்தூர் செல்லும் சாலை உள்பட பல்வேறு சாலைகள் பழுதாகி காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகா ரிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் சாலை சீரமைப்பு பணியில் தாமதம் ஏற்படுகிறது. எனவே அதற்குதீர்வு கண்டு, பழுதடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.