கோவை சாடிவயலில், 8 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வரும் யானைகள் முகாம் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதால், மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதல் கிடைத்த பின், திறக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட சாடிவயலில், வனத்துறை சார்பில், 2012ம் ஆண்டு, யானைகள் முகாம் துவங்கப்பட்டது. இந்த முகாமில், வளர்க்கப்படும் கும்கி யானைகள் கோவை மாவட்டத்தில், ஊருக்குள் புகும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வந்தன.
2020ம் ஆண்டு நவம்பரில், இங்கிருந்த கும்கி யானை, டாப்சிலிப் கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் மீண்டும் கொண்டு வரப்படவில்லை.
கோவை மாவட்டத்தில், பல்வேறு இடங்களில், காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து, விளை நிலங்களை சேதப்படுத்துவது அதிகரித்து வருவதால், சாடிவயலில் மீண்டும் யானைகள் முகாம் அமைக்கப்பட வேண்டும் என, பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், 2023ம் ஆண்டு, ‘சாடிவயலில், 8 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய யானைகள் முகாம் அமைக்கப்படும். திருச்சி, எம்.ஆர்.பாளையத்தில் உள்ள 19 வளர்ப்பு யானைகள் இங்கு கொண்டுவரப்படும்’ என அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, கடந்தாண்டு மார்ச் இறுதியில், சாடிவயலில், 50 ஏக்கர் பரப்பளவில், புதிய யானைகள் முகாம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. பழைய யானைகள் முகாமில் இருந்த வசதிகளை புனரமைத்தும், கூடுதலாக, 18 புதிய யானைகள் ஷெட், 2 கரோல், இரண்டு கி.மீ., தொலைவிற்கு சோலார் மின்வேலி, 40 சோலார் விளக்குகள், 3 சிறிய குட்டைகள், 8 மாவுத் மற்றும் காவடிகளுக்கான தங்கும் விடுதிகள், 20 இடங்களில் தண்ணீர் வசதி, 5 யானைகள் குளிப்பதற்கான ஷவர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, போர்வெல், சி.சி.டி.வி., கேமராக்கள், யானைகள் முகாமை சுற்றி அகழி ஆகிய பணிகள் துவங்கி நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள ஒரு சில பணிகளும் விரைவில் நிறைவடைய உள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், ‘சாடிவயலில் அமைக்கப்பட்டு வரும், யானைகள் முகாம் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
‘மீதமுள்ள பணிகள் இம்மாதம் நிறைவடையும். அதன்பின், மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று, யானைகள் கொண்டு வரப்படும். இங்கு, மீண்டும் கும்கி யானைகளை கொண்டு வரவும் திட்டமிடப்படுகிறது’ என்றனர்.