சர்வீஸ் சாலை மூடல்-பொதுமக்கள் கடும் அவதி

0
141

சர்வீஸ் சாலை சீரமைப்பு

கோவை -பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு சாலைப்புதூர் பெட்ரோல் பங்க் முதல் அரசம்பாளையம் பிரிவுவரை 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு கிணத்துக்கடவு ஊருக்குள் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் 5.5 மீட்டர் அகலத்தில் சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டது. தற்போது கிணத்துக்கடவு பஸ் நிலையம் முதல் கல்லாங்காட்டு புதூர் வரை உள்ள சர்வீஸ் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்காங்கே சாலையில் குழிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த சாலையை கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி சீரமைக்கும் பணி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மீண்டும் இந்த சாலையில் பல பகுதியில் குழி ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று சர்வீஸ் சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர்.

கடும் அவதி

சர்வீஸ் சாலையில் சீரமைக்கும் பணி நடைபெற்றதால் கோதவாடி பிரிவு பகுதியில் சாலையை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான வாகனத்தை நிறுத்தி வைத்து அடைத்தனர். இந்தநிலையில் பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு வழியாக கோவை சென்ற அனைத்து பஸ்களும் கிணத்துக்கடவு ஊருக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பயணிகளை கோதவாடி பிரிவு, சாலைப்புதூர் பகுதியில் சாலையில் இறக்கிவிட்டு சென்றனர். சில பயணிகளை மேம்பாலம் தாண்டி அரசம்பாளையம் பிரிவில் இறக்கி விட்டுச்சென்றனர். இதனால் பொள்ளாச்சி பகுதியில் இருந்து கிணத்துக்கடவு வந்த பொதுமக்கள், பயணிகள் கடுமையான வெயிலில் 2.5 கிலோமீட்டர் தூரம் நடந்து கடும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- சாலை சீரமைக்கும் போது அதற்கு மாற்று வழி இல்லாததால் கிணத்துக்கடவு ஊருக்கு வெளியே பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதனால் 2.5 கிலோமீட்டர் தூரம் கால் கடுக்க நடந்து கிணத்துக்கடவு ஊருக்குள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு மாற்று வழியாக சர்வீஸ் சாலை சீரமைக்கும் போது கிணத்துக்கடவு சாலைப்புதூர் பெட்ரோல் பங்க் அருகே கிணத்துக்கடவு ஊருக்குள் செல்லும் வகையில் அவசர கால வழியை தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.