சர்வீஸ் சாலையை விரிவுபடுத்த மனு, கிணத்துக்கடவில் கலெக்டர் ராஜாமணி ஆய்வு

0
96

கிணத்துக்கடவு பஸ்நிலையத்தில் இருந்து சாலைப்புதூர் பெட்ரோல் நிலையம் வரை அணுகுபாலம் அமைக்கப்பட்டது. இதன் இருபகுதியிலும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை ஒரு வழிப்பாதை என்பதால் எதிரே மற்ற வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதில் குறிப்பாக அணுகுபாலத்தின் மேற்கு பகுதியில் அண்ணாநகர், செம்மொழி கதிர்நகர், கிரீன் கார்டன், மீனாட்சி கார்டன், பகவதிபாளையம், நெ.10முத்தூர், வன்னி குமாரசாமி கோவில் ஆகியபகுதிக்குசெல்லும் பொதுமக்கள் கிணத்துக்கடவில் உள்ள தங்கள் வீடுகளுக்குசெல்லவேண்டும் என்றால் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்கராம்பாளையம் பிரிவுக்கு சென்றுதான் வீடுகளுக்கு வர முடியும். ஆகவே அணுகுபாலத்தை சுற்றி வருவதை தடுக்க கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் இருந்து எதிர் திசையில் தங்களது வீடுகளுக்குசெல்ல வசதியாக 5.5 மீட்டர் சாலையை அகல படுத்தி தரவேண்டும் என மேற்கண்ட கிராமமக்கள் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் மனு கொடுத்திருந்தனர்.

அதன் அடிப்படையில் கிணத்துக்கடவு பகவதிபாளையம் பிரிவுக்கு கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேரில் வந்து ஆய்வு செய்தார். அவருடன் கிணத்துக்கடவு தாசில்தார் சங்கீதா உள்பட அதிகாரிகள் இருந்தனர். அப்போது அங்கு பொதுமக்கள் கூடி கோரிக்கைகளை வலியுறுத்தினர். கிணத்துக்கடவு பஸ்நிலையத்தில் இருந்து அண்ணாநகர்வரை உள்ள சாலையை விரிவுபடுத்தி தரவேண்டும் என்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளர் உதயசங்கர் கூறுகையில், பொள்ளாச்சி- கோவை 4 வழிச்சாலை பணி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. சாலையை விரிவு படுத்தவேண்டும் என்றால் நிலம் ஆர்ஜிதம் செய்தால்தான் சாலையை விரிவு படுத்தமுடியும் என்றார். அதற்கு கலெக்டர், எந்த அளவிற்க்கு இடம் தேவையோ அதை கூறுங்கள். அதன்படி நிலம் ஆர்ஜிதம் செய்து விரிவுபடுத்தலாம். இந்த சாலையை விரிவுபடுத்துவதால் என்ன நன்மைகள் என்ன தீமைகள் என்பது குறித்து அறிக்கை தாருங்கள். அதன் பின்னர்ஆலோசனை செய்துவிட்டு முடிவு செய்யலாம் என்றார்.
இதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒத்துக்கொண்டனர்.