சரவணம்பட்டி, சிங்காநல்லுாரில் மேம்பாலம் ; மதிப்பீடு மாறுவதால் இப்போதைக்கு கட்ட வாய்ப்பில்லை

0
13

கோவை; சரவணம்பட்டி மற்றும் சிங்காநல்லுாரில் மேம்பாலங்கள் கட்டுவதற்கான திட்ட அறிக்கையின் மதிப்பீட்டுத் தொகையை, தற்போதைய சந்தை மதிப்புக்கு ஏற்ப திருத்தியமைக்க வேண்டியுள்ளது. அதனால், இவ்விரு மேம்பால கட்டுமானங்களும், தற்போதைக்கு சாத்தியமில்லாத சூழல் உருவாகியுள்ளது

கோவையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சாயிபாபா காலனி, சிங்காநல்லுார் மற்றும் சரவணம்பட்டியில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்கியது.

சாயிபாபா காலனியில்…

சாயிபாபா காலனியில் பணிகள் துவக்கப்பட்டு இருக்கின்றன. சிங்காநல்லுாரில் கட்டுவதற்கு ஐந்து முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது; கடைசி முறை கோரியபோது, எந்த ஒப்பந்ததாரரும் பங்கேற்கவில்லை.

திட்ட மதிப்பீடு தயாரித்து பல ஆண்டுகளாகி விட்டது.

கட்டுமான பொருட்களின் தற்போதைய விலை விகிதத்துடன் ஒப்பிடும்போது, மதிப்பீடு தொகை கட்டுப்படியாகாது என்பதால், டெண்டரில் பங்கேற்க, ஒப்பந்த நிறுவனங்கள் தயக்கம் காட்டுவது தெரியவந்தது.

தற்போதைய விலை விகிதத்துக்கு ஏற்ப, மதிப்பீடு தொகையை திருத்தியமைக்க வேண்டும். கூடுதல் தொகைக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி பெற்று, நிதி ஒதுக்கீடு பெற வேண்டும். அதன் பிறகே ‘டெண்டர்’ கோரப்பட்டு, ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

சரவணம்பட்டியில்…

இதேபோல், சரவணம்பட்டியில் மேம்பாலம் கட்டுவதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தடையின்மை சான்று (என்.ஓ.சி.,) வழங்கவில்லை. ஏனெனில், சத்தி ரோட்டின் மையப்பகுதியில் ‘மெட்ரோ ரயில்’ பயணிக்க இருப்பதால், மேம்பாலம் குறுக்கிடும்.

மெட்ரோ வழித்தடத்துக்கு ஏற்ப, மேம்பாலங்களை வேறு ‘டிசைனில்’ வடிவமைக்க வேண்டும். ரோட்டுக்கு கீழ் உள்ள காஸ் குழாய், பாதாள சாக்கடை குழாய், குடிநீர் குழாய் மற்றும் தொலைதொடர்பு ஒயர்களை மாற்றியமைக்க வேண்டும். இதற்கேற்ப திட்டமிட தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவுரை வழங்கியிருக்கிறது.

அதனால், சரவணம்பட்டியில் மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கையையும் திருத்தியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

நடுவே மெட்ரோ ரயில் சென்றால், அதன் இருபுறமும் மேம்பாலம் அமைப்பதற்கேற்ப ‘டிசைன்’ மாற்றியமைக்க வேண்டும்; மதிப்பீடு மாறும். நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழல் உருவானால், திட்ட மதிப்பீடு இன்னும் கூடுதலாகும்.

இதுபோன்ற நடைமுறையை பின்பற்ற வேண்டிய, இக்கட்டான சூழல் உருவாகியிருப்பதால், இப்பாலம் இப்போதைக்கு சாத்தியமில்லாத சூழல் உள்ளது

சரவணம்பட்டிக்கு அனுமதி தரவில்லை

தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ‘சிங்காநல்லுார் மேம்பாலத்துக்கு தற்போதைய விலை விகிதத்துக்கு மதிப்பீடு தயாரிக்கிறோம்; ஆறாவது முறை டெண்டர் கோரப்படும். சரவணம்பட்டியில் மேம்பாலம் கட்டுவதற்கு, ‘மெட்ரோ’ நிறுவனம் அனுமதி தரவில்லை. மெட்ரோ ரயில், மேம்பாலப் பணிகளை இணைத்து செய்வதாக இருந்தால், மதிப்பீடு அதிகரிக்கும். ‘டிசைன்’ மாற்ற வேண்டும். இதுதொடர்பாக, உயர்மட்ட அளவில் ஆலோசித்து வருகின்றனர்’ என்றனர்.