புதுடெல்லி,
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தீர்ப்பை எதிர்த்து அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யமாட்டோம் என்றும், தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.இதேபோல் சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும் மறுஆய்வு மனு தாக்கல் செய்வது இல்லை என்று தீர்மானித்து உள்ளது.
இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி வழங்கி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தேசிய அய்யப்ப பக்தர்கள் சார்பில் அந்த அமைப்பின் தலைவர் ஷைலஜா விஜயன் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு உலகெங்கும் உள்ள பல லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து உள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தவர்கள் அய்யப்ப பக்தர்கள் அல்ல.எனவே, அந்த மனுவின் மீது சுப்ரீம் கோர்ட்டு எந்த விசாரணையும் மேற்கொள்ள சட்டரீதியான முகாந்திரம் எதுவும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள மறுஆய்வு மனுதாரர்களின் சிந்தனை, வெளிப்பாடு, நம்பிக்கை, வழிபாடு ஆகிய அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்து இருக்கிறது.
சபரிமலை கோவிலில் பல ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்து உள்ளது. மக்களின் மத உணர்வை கோர்ட்டு மதிக்க வேண்டும். மேலும் மத நம்பிக்கை விவகாரங்களில் அரசியல் சாசனத்தில் விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. மத நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தில் கோர்ட்டு தலையிடக்கூடாது. சபரிமலை கோவில் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடத்தப்பட்ட விசாரணை பொதுநல வழக்கு என்ற நடைமுறைக்கு முற்றிலும் எதிராக அமைந்து உள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணையின் போது அய்யப்ப பக்தர்களின் தரப்பு விசாரிக்கப்படவில்லை. எனவே, இப்போதாவது அய்யப்ப பக்தர்கள் தரப்பு வாதங்களை கோர்ட்டு விசாரிக்க வேண்டும்.தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக தீர்ப்பு வந்தபோது மக்களின் பெருவாரியான போராட்டத்தை கருத்தில் கொண்டு அவர்களின் உணர்வுகளை மதித்து அனுமதி வழங்கியது போல, அய்யப்ப பக்தர்களின் மத உணர்வு மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை கருத்தில் கொண்டு சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மறுஆய்வு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இன்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. ஆனால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், வழக்கு பட்டியலிடப்பட்ட பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தது.