சபரிமலை சீசனால் விலை கிடுகிடு உயர்வு: தேங்காய்க்கு கிராக்கி! டன்னுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உயர்வு:

0
25
Coco. Coconut half and piece isolated. Cocos white. Full depth of field.

பொள்ளாச்சி: சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால், தேங்காய் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. ஒரு டன்னுக்கு, 5,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் இருந்து, தேங்காய், கொப்பரை போன்றவை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். விலை வீழ்ச்சி, வறட்சி, நோய் தாக்குதல் போன்ற காரணங்களால், தென்னை விவசாயிகள் மீளாத்துயரில் இருந்தனர்.

கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு பின், தற்போது, கொப்பரை விலை, 140 ரூபாய் வரை உயர்ந்தது. இந்நிலையில், சபரிமலை சீசன் துவங்கியுள்ள நிலையில், தேங்காய் தேவை அதிகரித்து, விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒரு டன் தேங்காய்க்கு, 5,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:

கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மூன்று மாதங்களும் சபரிமலை சீசன் என்பதால், தேங்காய் தேவை அதிகரித்துள்ளது.கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதால், மார்க்கெட்டில் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது.

நாடு முழுவதிலும் இருந்து, சபரிமலைக்கு அதிகளவு பக்தர்கள் செல்வதால், தேங்காயின் தேவை அதிகரித்துள்ளது.ஐயப்ப பக்தர்கள், நெய் தேங்காய், இருமுடி கட்டுதலுக்கு தேங்காய் அதிகளவில் வாங்குகின்றனர்.

தற்போது, வழக்கமான தேங்காய் வரத்தில், 20 – 30 சதவீதம் மட்டுமே உள்ளது. தேங்காய் சீசன் இல்லாத காலம் என்பதால், வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. இதனால், விலை உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் பச்சை தேங்காய் ஒரு டன், 47 ஆயிரம் ரூபாய்; கருப்பு தேங்காய், 49 ஆயிரம் ரூபாய், ஸ்பெஷல் கொப்பரை கிலோ, 130 ரூபாய்; சாதாரண கொப்பரை கிலோ, 120 ரூபாய், தேங்காய் பவுடர் கிலோ, 230 ரூபாய்க்கு விற்றது.

தற்போது, பச்சை தேங்காய் ஒரு டன், 53 ஆயிரம் ரூபாய், கருப்பு தேங்காய், 55 ஆயிரம், தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்) 2,800 முதல், 3,000 ரூபாய்; சாதாரண கொப்பரை ஒரு கிலோ, 135; ஸ்பெஷல் கொப்பரை, 140 ரூபாய், தேங்காய் பவுடர், 260 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், தேங்காய் டன்னுக்கு, ஐந்தாயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தொடர்ந்து கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு என வருவதால், தேங்காய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

ஜன., பிப்., மாதங்களிலும் தட்டுப்பாடு நீடிக்கும் என்பதால், தேங்காய் விலை குறைய வாய்ப்பு இல்லை. தேங்காய் ஒரு டன்னுக்கு, 60 ஆயிரம் ரூபாய் வரை விலை உயரும். இவ்வாறு, அவர் கூறினார்.