சந்தன மரங்களை வெட்டிய கும்பல் – பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்

0
114

கோவை மாநகர பகுதியில் இரவு நேரத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதைத்தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து உள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர். மேலும் இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணாம்பாளையம் பாலசுந்தரம் லே-அவுட் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் அங்குள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள், அங்கிருந்த சந்தன மரத்தை வெட்டிக்கொண்டு இருந்தனர்.
அந்த சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது அங்கு சிலர் கையில் அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் நின்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். ஆனாலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், வீட்டின் உரிமையாளரை மிரட்டி உள்ளனர். பின்னர் சந்தன மரத்தை துண்டு துண்டாக வெட்டினர். இதனால் அந்த வீட்டின் உரிமையாளர் திருடன் திருடன் என்று கூச்சல் போட்டார்.
உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். அதை பார்த்ததும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வெட்டிய சந்தன மர துண்டுகளை தூக்கிக் கொண்டு தப்பி ஓடினார்கள். இதை பார்த்த பொதுமக்களும் அவர்களை துரத்திச்சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கும்பல், அங்குள்ள தோட்டத்துக்குள் சந்தன மரக்கட்டைகளை போட்டு விட்டு தப்பி ஓடியது. இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். நேற்று காலையில் போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது அந்த தோட்டத்தின் அருகில் புதர்மண்டி கிடந்த இடத்தில் ஏராள மான சந்தன மரக்கட்டைகள் கிடந்தன. அங்கு தற்காலிக கூடாரமும் அமைக்கப் பட்டு இருந்தது. அதற்குள் ரெயில் டிக்கெட், கொசு மருந்து, பீடிகட்டுகள் உள்பட பல்வேறு பொருட்கள் கிடந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் சம்பவம் நடந்த பகுதி அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 15 பேர் கொண்ட கும்பல் கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களுடன் வந்து சந்தனமரத்தை வெட்டி கடத்திச்செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தது.
இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
சிங்காநல்லூரில் சந்தன மரங்களை துண்டு துண்டாக வெட்டிய கும்பல் ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருந்தது. பொதுமக்கள் துரத்தியதால் அந்த கும்பல் சந்தன மரங்களை போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டது. அவர்கள், சந்தன மரங்களை வெட்ட வந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் உள்ள 15 பேரும் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று உள்ளனர். இதனால் அவர்களின் முகம் தெரியவில்லை. சந்தன மரங்களை பதுக்கிய இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகளை வைத்து பார்க்கும்போது அவர்கள், தர்மபுரி, திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே விரைவில் அந்த கும்பலை பிடித்து விடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.