சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0
15

கோவை; கோவை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில், காலியாக உள்ள, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு, பணி மூப்பு அடிப்படையில் சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியுடன் ரூ.6,750 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோஷம் எழுப்பினர்.

மாவட்ட தலைவர் வாசுகி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெசி பிரியதர்ஷினி, கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

மாநில துணை தலைவர் பிரகலதா, சிறப்புரை ஆற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் உதயக்குமார், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய குமார் வாழ்த்துரை வழங்கினர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கட சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் ரதி நன்றி கூறினார்.