மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடி அமாவாசை திருவிழாவானது மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு வருகிற 28-ந் தேதி ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது.
இதையடுத்து பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு வருகிற 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
2 ஆண்டுகளுக்கு பிறகு சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாணிப்பாறை அடிவாரப்பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதை யொட்டி, கோயில் வளாகத்திலும் அடிவாரப் பகுதியான தாணிப் பாறையிலும் பாதுகாப்பு ஏற் பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதோடு, ஆயிரக்கணக்கான தனியார் வாகனங்களும் வந்து செல்லும் வகையில் தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.