புதுடெல்லி,
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சண்டிகார் யூனியன் பிரதேசத்தில் இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்லும் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் அணிவதற்கு டெல்லி அரசு விதிவிலக்கு அளித்துள்ளது.
இந்த அறிவிப்பினை சண்டிகார் நிர்வாகம் பின்பற்றும்படி உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது என தெரிவித்துள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு ஜூன் 4ந்தேதி டெல்லி போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பெண்கள் வாகனங்களை ஓட்டும்பொழுதோ அல்லது பின்னால் அமர்ந்து செல்லும்பொழுதோ ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை என தெரிவித்திருந்தது.
அதன்பின் இந்த விதியானது கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்டு 28ந்தேதி பெண்கள் என்பதற்கு பதிலாக சீக்கிய பெண்கள் என திருத்தப்பட்டது.
இந்த நிலையில், அகாலி தள தலைவர் மற்றும் பஞ்சாபின் முன்னாள் துணை முதல் மந்திரியான சுக்பீர் சிங் பாதல் சண்டிகாரிலும் இந்த விதியை பின்பற்ற அனுமதி அளிக்க கோரி உள்துறை மந்திரியை சந்தித்து பேசினார்.
இதனை அடுத்து சண்டிகாரில் உள்ள சீக்கிய பெண்கள் ஹெல்மெட் அணிவதற்கு விதிவிலக்கு அளிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.