சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகள் இலக்கு! முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு

0
1

”சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெற்று அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்கும்,” என, முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.

பொள்ளாச்சி வடக்கு கிழக்கு ஒன்றியம் மற்றும் பெரிய நெகமம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள பூத் கமிட்டிக்கான ஆலோசனை கூட்டம், ராசக்காபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

மேலிட பார்வையாளர் மாநில வக்கீல் பிரிவு தலைவர் சேதுராமன், பொள்ளாச்சி சட்டசபை தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர் சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி, கொள்கை பரப்பு செயலாளர் அசோகன் ஆகியோர் ஆய்வில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர். கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் முன்னிலை வகித்தார்.

எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது: தமிழகத்தில் மோசமான, அபாயகரமான, விபரிதமான ஆட்சியாக தி.மு.க., ஆட்சி உள்ளது. இந்த ஆட்சி மீண்டும் வரக்கூடாது; மக்கள் நிராகரிக்க வேண்டும்.ஒரு குடும்பத்துக்காக நடைபெறும் இந்த ஆட்சியால் யாருக்கும் நிம்மதி இல்லை. இந்த ஆட்சியை விரைவில் அகற்ற அனைவரும் பாடுபட வேண்டும்.

அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, தற்போது இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர, அ.தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும்.

இவ்வாறு, பேசினார்.

முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:

தி.மு.க.,வின் நான்கு ஆண்டு ஆட்சியில், எந்த திட்டமும் வரவில்லை. விளம்பரம் மட்டுமே இந்த ஆட்சியில் உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், கோவை மாவட்டத்தில், 50 ஆண்டுகால வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், தற்போதைய ஆட்சியில் மக்களுக்கான எந்த திட்டமும் இல்லை.

எங்கு பார்த்தாலும் பாலியல் சம்பவங்கள் நடக்கின்றன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. கொலை, கொள்ளை என குற்ற சம்பவங்களால், தமிழக மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.

சொத்து வரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, என, அனைத்தும் உயர்ந்ததால் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெற்று அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு, பேசினார்.

நகர செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.