சட்டசபை ஆவணங்களுக்கு புதிய இணையதளம் துவக்கம்

0
4

சட்டசபை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

சட்டசபை மற்றும் மேல்சபை நடவடிக்கை குறிப்பு புத்தகங்கள், குழுக்களின் அறிக்கைகள், சபையில் வைக்கப்பட்ட ஏடுகள், வெளியீடுகள், புகைப்படங்கள், செய்தி துணுக்குகள், வீடியோ துணுக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் நவீன முறையில் கணினிமயமாக்கம் செய்யும் பணி, மின் ஆளுமை முகமை மேற்பார்வையில் சட்டசபை செயலகத்தில் நடந்து வருகிறது.

முதல் கட்டமாக, 1952 முதல் 2024ம் ஆண்டு வரை, சட்டசபை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட tnlasdigital.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த இணையதளத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், தியாகராஜன், துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு கொறடா ராமச்சந்திரன், சட்டசபை செயலர் சீனிவாசன் பங்கேற்றனர்.

இது தொடர்பாக, சபாநாயகர் அப்பாவு நேற்றுசட்டசபையில் கூறியதாவது:

கடந்த 2021 ஆகஸ்ட் 21ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, முதல் கட்டமாக, 1952 முதல் 2024 வரை சட்டசபை, மேல்சபை நிகழ்வுகளின் பதிவுகள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 1921 முதல் 1952 வரையிலான சட்டசபை நிகழ்வுகளை கணினிமயமாக்குவதில், பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

இப்பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த மூன்றுமாதங்களில் இணையத்தில்பதிவேற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.