தொண்டாமுத்தூர் : கோவையில், காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க, 7 கோடி ரூபாய் மதிப்பில், பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி, அறிவிக்கப்பட்டு, 2 மாதங்களாகியும் துவங்கப்படாமல் உள்ளது. அறிவிப்பு மறந்து போனதா என வேதனையுடன் கேட்கின்றனர் விவசாயிகள்.
கோவை வனக்கோட்டத்திற்குட்பட்டு கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை மேட்டுப்பாளையம், சிறுமுகை என, 7 வனச்சரகங்கள், 670 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே, காலமாற்றம், வழித்தடம் ஆக்கிரமிப்பு, உணவு தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால், காட்டு யானைகள், வனப்பகுதியை விட்டு வெளியேறி, தினசரி விலை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து, அதிக சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
வனத்துறை சார்பில், குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், காட்டு யானைகளால் சேதங்கள் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவ்வப்போது, மனித – விலங்கு மோதல் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
ஆய்வும்…அறிவிப்பும்!
காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, முன்னாள் அமைச்சர் வேலுமணி, கடந்தாண்டு அக்டோபரில் இப்பகுதிகளில் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், கடந்தாண்டு நவம்பர் மாதம், தொண்டாமுத்தூர் பகுதியில், 7 கோடி ரூபாய் மதிப்பில், காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க, வன எல்லை பகுதியில், பாதுகாப்பு வேலி அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
முதற்கட்டமாக, கோவை வனச்சரகத்திற்குட்பட்ட அட்டுக்கல் முதல், ஓணாப்பாளையம் வரையுள்ள 5 கி.மீ., தொலைவிற்கும், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட அட்டுக்கல் பெரும் பள்ளம் முதல் தேவராயபுரம் வரையில் உள்ள 5 கி.மீ., தொலைவிற்கும், வேலி அமைக்கப்படும்; அதன்பின், கோவை மாவட்டம் முழுவதும் காட்டு யானைகளை தடுக்க, வேலி அமைக்கப்படும் என, வனத்துறையினரும் தெரிவித்தனர்.
மறந்து போன அறிவிப்பு
முதல்வர் சட்டசபையில் அறிவித்து, இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் இத்திட்டப்பணி துவங்கப்படாமல் உள்ளது.
தற்போதும், கோவை மாவட்டத்தின் பல பகுதிகளிலும், நாள்தோறும் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி, விவசாய பயிர்களை சேதமாக்கி வருவது தொடர் கதையாகி வருகிறது. விவசாயிகள் என்ன செய்வதென தெரியாமல், அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்.
அடுத்த மாதம் துவங்குமாம்!
மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
”அடுத்த மாதத்திற்குள் ஒப்புதல் கிடைத்துவிடும். அதன்பின், பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிக்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கப்படும்,” என்றார்.
மதிப்பீடு அனுப்பி…ஒப்புதல் கிடைத்து…நிதி ஒதுக்கி…பணிகள் துவங்குவதற்குள் இன்னும் எத்தனை பயிர்கள் சேதமாகப்போகிறதோ, எத்தனை மனித உயிர்களை இழக்கப்போகிறோமோ!