கோவை: கோவை லங்கா கார்னர் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில், போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, ‘ரவுண்டானா’ அமைக்க வேண்டிய இடத்தை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.
‘விபத்தில்லா கோவை’ உருவாக்க திட்டமிடப்பட்டு, நகரப் பகுதியில் தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. திருச்சி ரோட்டில் அரசு மருத்துவமனை முன் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பஸ் ஸ்டாப்பை மாற்றியமைக்க அறிவுறுத்தப்பட்டது.
அவ்விடத்தை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டார்.
பெரிய கடை வீதி மற்றும் கூட்ஸ் ஷெட் ரோட்டில் இருந்து திருச்சி ரோட்டுக்குச் செல்லும் வாகனங்களும், திருச்சி ரோட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் ரோட்டுக்குச் செல்லும் வாகனங்களும் லங்கா கார்னர் பகுதியில் நெருக்கடியில் சிக்குவதை தவிர்க்க, ‘ரவுண்டானா’ அமைக்க, நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழுவினர் அறிவுறுத்தினர். அதற்கான பணிகளை மேற்கொள்ள கமிஷனர் அறிவுறுத்தினார்.
ராமநாதபுரம் சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தவிர்க்க, சிக்னல் முறையை ரத்து செய்து, 100 மீட்டர் தள்ளி, ‘யூ டேர்ன்’ வசதி ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டில் பஸ்கள் வெளியேறும் பகுதியில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க, ‘ரவுண்டானா’ அமைக்க அறிவுறுத்தப்பட்டது; அதற்கான செலவினத்தை ஏற்க முடியாதென நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
அதனால், உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்தும் போது, மாநகராட்சி நிர்வாகமே தேவையான வசதி செய்து தருவதாக, கமிஷனர் உறுதியளித்தார்.
மேட்டுப்பாளையம் ரோட்டில் சாயிபாபா காலனியில் மேம்பாலம் கட்டும் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் உடைத்த இடங்களை கமிஷனர் பார்வையிட்டார். இன்னொரு துாண் தோண்டும் போதும் குழாய் உடைய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
குழாயை மாற்றியமைக்கும் செலவை யார் ஏற்பது என்கிற பிரச்னை தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சிக்கு இடையே ஏற்பட்டு இருக்கிறது.
அதனால், அடுத்த துாண் எழுப்பும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், ‘ரவுண்டானா’ அமையும் இடங்களில் எதிர் திசையில் வரும் வாகனங்கள் தெரியும் அளவுக்கு உயரம் சற்று குறைவாக அமைக்க வேண்டுமென சாலை பாதுகாப்பு குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அப்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்கள் மனுநீதி (சாலை பாதுகாப்பு), தனபால் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.